காற்றுடன் பலத்த மழை: சென்னையில் 16 விமான சேவைகள் பாதிப்பு
காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
மீனம்பாக்கம்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதேபோல் கண்ணூரில் இருந்து சென்னை வந்த விமானம், சிங்கப்பூரில் இருந்து வந்த விமானம், மும்பையில் இருந்து வந்த விமானம், டெல்லியில் இருந்து வந்த விமானம் ஆகிய 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தன. பின்னர் வானிலை சீரடைந்ததும் தாமதமாக தரை இறங்கின.
16 விமான சேவைகள் பாதிப்பு
மேலும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 2 கோலாலம்பூர் விமானங்கள், துபாய், குவைத், சிங்கப்பூர் ஆகிய 5 பன்னாட்டு விமானங்கள், மும்பை, ஐதராபாத், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 6 உள்நாட்டு விமானங்கள் என 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு் சென்றன. வருகை மற்றும் புறப்பாடு என 16 விமான சேவைகள் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.