கடலூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை அதிகபட்சமாக வடக்குத்தில் 73 மி.மீ. பதிவானது
கடலூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக வடக்குத்தில் 73 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் அந்தமான் அருகே நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறி பின்னர் வளைந்து வடக்கு நோக்கி நகர்ந்து ஒடிசா கரையை உரசியவாறு மேற்கு வங்கம் அல்லது வங்கதேசம் அருகே 25-ந் தேதி கரையை கடக்கக்கூடும் எனவும், அதனால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. அதன் பிறகு விடிய விடிய மழை தூறிக்கொண்டே இருந்தது. இதில் அவ்வப்போது கனமழையாகவும் பெய்தது. இந்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.
பலத்த மழை
பின்னர் பகலில் மழை ஓய்ந்து வெயில் அடிக்க தொடங்கியது. இதேபோல் வேப்பூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், பண்ருட்டி உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வடக்குத்தில் 73 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக அண்ணாமலை நகரில் 3 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.