இடி-மின்னலுடன் பலத்த மழை
நெமிலி மற்றும் அரக்கோணம் பகுதியில் நேற்று இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அரக்கோணத்தில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குளாளாகினர்.;
இடி-மின்னலுடன் பலத்த மழை
நெமிலி, சயனபுரம், அசநெல்லிகுப்பம், ரெட்டிவலம், கீழ்வீதி, பள்ளுர் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்று மாலை நெமிலியில் புழுதியுடன் சூறாவளி காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதைதொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
இதனால் வேலை முடிந்து வீடு திரும்புவோரும், வெளியூர்களுக்கு செல்வோரும் நெமிலி பஸ் நிலையத்திலேயே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
மின்தடை
அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இரவிலும் வெப்பம் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல வெயில் அடித்த நிலையில் மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நகரை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. பலத்த காற்று வீசியதில் அரக்கோணம் பங்காரம்மா கண்டிகை ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லும் ரோட்டில் மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் முறிந்து விழுந்த மரத்தை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மழை காரணமாக இரவில் குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இரவு 8 மணிக்கு மேலாகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகினர்.