இடி, மின்னலுடன் பலத்த மழை
கள்ளக்குறிச்சி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கள்ளக்குறிச்சியில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமமடைந்தனர். இந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் திரண்டன. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சில இடங்களில் வாய்க்கால் தூர்வாராததால் கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கி நின்றது. திடீரென மழை பெய்ததால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. இதேபோல் சின்னசேலம், கச்சிராயப்பாளையம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. 2 வாரங்களுக்கு பிறகு நேற்று மழைபெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.