இடி மின்னலுடன் பலத்த மழை
கள்ளக்குறிச்சி பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. திருக்கோவிலூர் அருகே மின்னல் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்
கள்ளக்குறிச்சி
சுட்டெரித்த வெயில்
கள்ளக்குறிச்சியில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் சுள்ளென அடித்தது. பின்னர் மதியம் வானத்தில் கருமேகங்கள் திரண்டன. சில நிமிடங்களில் இடி-மின்னலுடன் மழைபெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நெரம் செல்ல செல்ல பலத்த மழையாக வெளுத்து கட்டியது. மதியம் 3.30 மணிமுதல் மாலை 6 மணிவரை சுமார் 2½ மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதனால் துருகம் சாலை, சேலம் மெயின்ரோடு மற்றும் பல்வேறு தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. மேலும் சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் இரண்டற கலந்து சென்றதால் துர்நாற்றம் வீசியது. அதேபோல் சின்னசேலம், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
கல்வராயன்மலை
கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை, கரியாலூர், கொட்டபுத்தூர், மாவடிப்பட்டு, சேராப்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவலாக மழை பெய்தது.
இதனால் கல்வராயன்மலை சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் வெள்ளிமலை மற்றும் மணலாறு ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. அதேபோல் இங்குள்ள சில நீர் வீழ்ச்சிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
குளிப்பதற்கு தடை
பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சிராயப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியுற்றனர்.
இந்த மழையால் பூமிகுளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் சில நாட்கள் கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில் தற்போது மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மின்னல் தாக்கி
திருக்கோவிலூர் அருகே உள்ள கோட்டமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாவாடை மகன் பிரபு(வயது 40). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று அதே ஊரில் உள்ள குளத்தங்கரை அருகே நின்று கொண்டிருந்தபோது அவரை மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.