கனமழை எதிரொலி: சென்னையில் மீட்பு, நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
சென்னையில் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.;
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த மழையால், மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. சாலைகளில் வெள்ளம், வீடுகளுக்குள் தண்ணீர், போக்குவரத்து பாதிப்பு என பலவழிகளில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மழை பாதிப்புகளை சரி செய்ய போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.
மீண்டும் கடுமையான மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் சென்னை மாநகரின் நிலை என்னவாகுமோ? என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது. மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் கனமழை தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவுபடுத்த வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.