தூத்துக்குடியில் பலத்த மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

Update: 2022-11-29 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. இதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

பருவ மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. ஆனாலும் மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை. கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரை சராசரியாக 347.4 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 246.1 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இதன் மூலம் 29 சதவீதம் மழை குறைவாக பெய்து உள்ளது. எனவே, இந்த ஆண்டு போதுமான மழை பெய்யுமா? என்று மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கேரள பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி கடந்த 2 நாட்களாக அவ்வப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை

செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மாவட்டத்தில் பல இடங்களில் லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. காலையில் மழை தீவிரமடைந்தது. தொடர்ந்து கனமழை பெய்து கொண்டே இருந்தது. சுமார் 9 மணி வரை நீடித்த மழையால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது.

தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், மாவட்டம் முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதே நேரத்தில் பல பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று விட்டதால், மீண்டும் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். காலை 10 மணிக்கு பிறகு மழை நின்றது. தொடர்ந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்