கடவூர் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. மாலையில் வானில் வானவில் தோன்றியது. பின்னர் சிறிது நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் தடுப்பணைகள் நிரம்பி, பாசன குளங்களுக்கு மழைநீர் செல்கிறது. இதனால் விவசாய கிணறுகள், குடிநீர் குழாய்களில் நீர் ஊற்று ஏற்பட்டு வருகிறது. இந்த மழையால் கடவூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் இந்த மழை தொடர்ந்து பெய்தால் விவசாயத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.