மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது.

Update: 2023-09-07 21:51 GMT

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நின்றது.

குறிப்பாக பாரிமுனை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, ஆழ்வார் பேட்டை, அடையாறு, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், அம்பத்தூர், ஆவடி, மயிலாப்பூர், மெரினா, சேப்பாக்கம், தியாகராய நகர், பட்டாபிராம், மதுரவாயல், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், கொரட்டூர், பாடி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், கிண்டி, செங்குன்றம், மூலக்கடை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி, மாதவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை வெளுத்து வாங்கியது.

நனைந்தபடி சென்ற மக்கள்

இதனால் வேலை முடிந்து சென்ற மக்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்றனர். சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் தேர் பவனி விழா நேற்று இரவு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மழையில் நனைந்தபடியே சாமி தரிசனம் செய்தனர்.

சென்னையில், நேற்று பகல் நேரங்களிலும் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இரவில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்