3-வது நாளாக அடை மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 3-வது நாளாக அடை மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை மிதமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை நேற்று காலை 6 மணி வரை விட்டுவிட்டு தூறிக்கொண்டே இருந்தது. இதனால் நேற்றும் 2-வது நாளாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் பரவலாக மழை பெய்தது. விழுப்புரத்தில் காலை முதல் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தபோதிலும் மழையில்லை. காலை 11.30 மணிக்கு மேல் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழையாக தூறிக்கொண்டே இருந்தது.
சேறும், சகதியுமான சாலைகள்
அதன் பிறகு சில மணி நேரம் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் மாலை 4 மணிக்கு மேல் பெய்யத்தொடங்கிய மழை, இரவு வரை விட்டுவிட்டு சாரலாக தூறிக்கொண்டே இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் குடைபிடித்தபடி சென்றதை காண முடிந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் மழையில் நனைந்தபடி சென்றனர்.
இந்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கத்தொடங்கியது. மேலும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை, சென்னை- திருச்சி நெடுஞ்சாலை, கிழக்கு புதுச்சேரி சாலை, பாண்டியன் நகர், வழுதரெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.மேலும் தொடர் மழையினால் சாலாமேடு, மணிநகர், கம்பன் நகர், சர்வே நகர், பிரியதர்ஷினி நகர், மஞ்சு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டு அங்கு சாலை வசதி செய்து கொடுக்காததால் அங்குள்ள சாலைகள் சேறும், சகதியுமாக வயல்வெளி போன்று மாறியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தரைக்கடை, தள்ளுவண்டி, சாலையோரங்களில் கடைகள் வைத்திருப்பவர்களின் வியாபாரம் முடங்கியதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் சாலையோர கடையில் மழை கோட்டு விற்பனை அமோகமாக நடைபெற்றது. 3-வது நாளாக பெய்த அடை மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.