கூத்தாநல்லூர், திருமக்கோட்டையில் பரவலாக மழை
கூத்தாநல்லூர், திருமக்கோட்டையில் பரவலாக பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.
கூத்தாநல்லூர்;
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், ராமநாதபுரம், திருராமேஸ்வரம், கோரையாறு, ஓவர்ச்சேரி, பழையனூர், நாகங்குடி, சித்தனங்குடி, வெள்ளக்குடி, விழல்கோட்டகம், பண்டுதக்குடி, மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை நேற்று காலை 10 மணி வரை பரவலாக பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இதன்பின்னர் நேற்று மதியம் வரை வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இதைப்பால திருமக்கோட்டை பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. திருமக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கோவிந்தநத்தம், பாளையக்கோட்டை, சமுதாயம், ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், மேலநத்தம், பெருமாள் கோவில்நத்தம், கழிச்சாங்கோட்டை, கன்னியாகுறிச்சி, பாவாஜிக்கோட்டை ஆகிய ஊர்களில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. மேலும் பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.