'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதையும் மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-05 19:30 GMT

கோவை

கோவையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதையும் மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

திரைப்படத்துக்கு எதிர்ப்பு

சுதீப்டோ சென் இயக்கியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தில், கேரளாவை சேர்ந்த பெண்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மேலும் தமிழகத்தில் அந்த திரைப்படம் வெளியானால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாநில அரசை உளவுத்துறை எச்சரித்து இருந்தது.

இதையொட்டி அந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தினார்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நேற்று கோவையில் உள்ள பன்மால், புரூக்பீல்டு உள்பட 3 வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் வெளியானது. இதையொட்டி அங்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சந்தீஸ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அந்த வணிக வளாகங்களுக்கு வந்த பொதுமக்களை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். குடிநீர் பாட்டில்களை கூட உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் வணிக வளாகங்கள் முன்பு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

முற்றுகை போராட்டம்

இதற்கிடையில் புரூக்பீல்டு வணிக வளாகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமையில் ஏராளமானோர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தடுப்புகளை தாண்டி வணிக வளாகத்திற்குள் செல்ல முயன்றனர். மேலும் அந்த திரைப்படத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று அங்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் உசேன் தலைமை தாங்கினார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டங்களில் மொத்தம் 130 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்