தலைவர்களின் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் தலைவர்களின் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

Update: 2022-09-26 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள அண்ணாவின் முழுஉருவ சிலையின் முகத்தை நேற்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள், சிவப்பு நிற துணியால் மூடியதோடு, தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா எம்.பி.யின் படத்திற்கு பொட்டு வைத்தபடி அந்த படத்துடன் கூடிய செருப்பு மாலையையும் அண்ணா சிலைக்கு அணிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஆ.ராசா எம்.பி., இந்துக்களுக்கு எதிராக விமர்சனம் செய்து வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இதுபோன்ற சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா சிலை அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரம் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கண்டமங்கலம் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நீடித்து வருவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மற்ற இடங்களில் உள்ள மகாத்மாகாந்தி, அண்ணா, பெரியார், அம்பேத்கர், ராஜீவ்காந்தி, எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் என 210 சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிரமாக வாகன சோதனை மேற்கொண்டு சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்