தென்மேற்கு பருவமழை காரணமாக வால்பாறையில் கடும் பனிமூட்டம்-முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்ற வாகனங்கள்

தென்மேற்கு பருவமழை காரணமாக வால்பாறையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகனங்களை இயக்கி வருகிறார்கள்.

Update: 2023-06-16 00:30 GMT

வால்பாறை

தென்மேற்கு பருவமழை காரணமாக வால்பாறையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகனங்களை இயக்கி வருகிறார்கள்.

அணைகள் நீர்மட்டம் உயர்வு

கேரளாவில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதன் எதிரொலியாக வால்பாறை பகுதியில் இரவிலும் பகலிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மதியமும் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த வாரத்தில் வெறும் 10 அடியாக இருந்தது. ஒரு வாரத்தில் 20 அடி உயர்ந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி 31 அடியை எட்டியது. சோலையாறு அணைக்கு வினாடிக்கு 255 கன அடித் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பனிமூட்டம்

இந்த மழை காரணமாக வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் பட்டப்பகலில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்கை போட்டுக் கொண்டு வாகனங்களை ஓட்டிச் சென்று வருகின்றனர். வால்பாறைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பனிமூட்டத்தை கண்டு ரசித்து அனுபவித்து செல்பி எடுத்து மகிழ்ந்து சென்றனர்.

வால்பாறை பகுதியில் தென் மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருவதை முன்னிட்டு வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் பகல் மற்றும் இரவு நேரத்தில் பனிமூட்டம் நிலவுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மலைப் பாதை சாலையில் கவனமாக வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும். பனிமூட்டம் அதிகமாக இருக்கும் சமயத்தில் சிறிது நேரம் வாகனங்களை நிறுத்தி பின்னர் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்று வால்பாறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையோரம் எச்சரிக்கை பலகை அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்