தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் கனகராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் சத்தியமூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் மேல்நிலை, உயர்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவேண்டும். பதவி உயர்வு குறித்து ஆண்டுதோறும் கருத்து கேட்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். ஏற்கனவே இருந்த 5:2 எனும் விகிதாசார அடிப்படையிலேயே தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியத்தை வழங்கிட வேண்டும். அனைத்து உயர்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கிட வேண்டும் என்பன உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் நேரு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜயமனோகரன், தமிழ்நாடு கல்வித்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் கணேசன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சோமசுந்தரம், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டததாரி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் அன்பரசு, தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.