தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்திய 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்திய 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தாளவாடி
தாளவாடி அடுத்த மகாராஜன்புரம் சோதனை சாவடி அருகே தாளவாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு வேன் ஒன்று வந்தது. அதை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வேனில் இருந்த 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் தாளவாடியை சேர்ந்த ஜெயகுமார் (வயது 25), மனோஜ் (23) என்பதும் தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசியை கொண்டு சென்று விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து வேனையும், 1,000 கிலோ ரேஷன் அரிசிையயும் பறிமுதல் செய்த போலீசார் ஜெயக்குமார், மனோஜ் இருவரையும் கைது செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.