பாம்பு போல ஊர்ந்து வந்த பூசாரி
வேடசந்தூரில் நாகம்மாள் கோவில் திருவிழாவில் பூசாரி ஆறுமுகம் பாம்பு போல் ஊர்ந்து கோவிலை சுற்றி வலம் வந்தார்.
வேடசந்தூர் சாலைத்தெருவில் உள்ள நாகம்மாள் கோவிலில், ஆடிமாத திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த 2-ந்தேதி இரவு அம்மன் கரகம் அலங்கரித்து கோவிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அக்னி சட்டி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதனையடுத்து மூலவர் நாகம்மாளுக்கும், கோவில் முன்பு உள்ள 54 அடி உயரம் கொண்ட அக்னி காளியம்மன் சிலைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது கோவில் பூசாரி ஆறுமுகம், அருள் வந்து ஆடினார். பின்னர் அவர், பாம்பு போல ஊர்ந்து கோவிலை சுற்றி வலம் வந்தார். அந்த சமயத்தில், மஞ்சள் நீரை கோவில் பூசாரி மீது பெண்கள் ஊற்றினர். அதன் பின்னர் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன், அம்மன் கரகம் குடகனாற்றுக்கு எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.