தகுதியுள்ள மகளிருக்கு ரூ. 2 ஆயிரம் கிடைக்குமா?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியிருந்தும் சில காரணங்களால் நிராகரிக்கப்பட்ட மகளிருக்கு கடந்த மாதத்துக்கான தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-10-03 13:35 GMT

போடிப்பட்டி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியிருந்தும் சில காரணங்களால் நிராகரிக்கப்பட்ட மகளிருக்கு கடந்த மாதத்துக்கான தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விதிமுறைகள்

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மகளிருக்கு மாதம் தோறும் ரூ. 1000 வழங்கும் வகையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் சொந்தமாக கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது.ஆண்டு வருமானம் ரூ. 2½ லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவராக இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த மாதம் 14-ந் தேதி முதல் அவர்களின் வங்கிக் கணக்குக்கு ரூ. 1000 அனுப்பப்பட்டது.

மேல் முறையீடு

சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தகுதியுள்ள பலருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கான காரணமாக உரிய தகவல்கள் இல்லை.தரவுகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து உரிய தகவல்களுடன் அந்தந்த வட்டங்களில் உள்ள மேல் முறையீட்டு மையங்களில் விண்ணப்பிக்க வரும் 15-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தகுதியிருந்தும் உரிய தரவுகள் இல்லாமல் நிராகரிக்கப்பட்ட மகளிருக்கு கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ரூ. 1000-ம் சேர்த்து வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தகுதியிருந்தும் சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக உரிமைத்தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.ஆனால் திட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே வழங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்