குரூப்-2 தேர்வில் குளறுபடி நடந்ததா?- சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு
குரூப்-2 தேர்வில் குளறுபடி நடந்ததாக தொடர்ந்த வழக்கில் தேர்வு மையத்தின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
குரூப்-2 தேர்வில் குளறுபடி நடந்ததாக தொடர்ந்த வழக்கில் தேர்வு மையத்தின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
குரூப்-2 தேர்வு
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
பி.ஏ. தமிழ் படித்துள்ளேன். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 மற்றும் குரூப் 2-ஏ பணிகளுக்கான தேர்வில் கலந்து கொண்டேன். இந்த தேர்வில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2-ம் நிலை தேர்வு நடக்கும். 2-ம் நிலை தேர்வானது காலையில் தமிழ் மொழிக்கும், மதியம் பொது அறிவுக்கும் நடந்தது. அதன்படி, முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நான், 2-ம் நிலைத்தேர்வில் கலந்து கொண்டேன். இந்த தேர்வு மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அப்போது, மதியம் நடந்த தேர்வில் எனக்கு வழங்கப்பட்ட தேர்வுத்தாள், வினாத்தாளில் எனது எண்ணுக்கு பதிலாக வேறொருவரின் தேர்வு எண் இருந்தது. இது குறித்து கேட்டபோது, அந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய பலருக்கும் இதுபோல் மாறியிருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து தேர்வு நிறுத்திவைக்கப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக தேர்வு நடத்தப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், பலரும் செல்போனை பார்த்தும், புத்தகங்களை பார்த்தும் கேள்விகளுக்கான பதிலை எழுதினர்.
இதனால் மதியம் நடந்த தேர்வுக்கு நேரம் கொடுக்காமல், மாலை 5.30 மணிக்கு தேர்வை முடித்தனர். ஆனால், வெளியில் வந்து பார்த்தபோது, அந்த மையத்தில் இருந்த பிற அறைகளில் தேர்வு நடந்து கொண்டிருந்தது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதனால் மதிப்பெண் வித்தியாசம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, குரூப்-2 மற்றும் குரூப் 2-ஏ தேர்வில் பொது அறிவுத்தேர்வை மட்டும் ரத்து செய்து விட்டு மீண்டும் அந்த தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
சி.சி.டி.வி. காட்சிகள்
இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது,
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "முறைகேடு நடந்ததாக கூறப்படும் தேர்வு மையத்தின் சி.சி.டிவி. காட்சிகளையும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தேர்வு நடந்த போது எடுத்த வீடியோ பதிவுகளையும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளரும், தேர்வு மையத்தின் பொறுப்பாளரும் தாக்கல் செய்ய வேண்டும்"் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இந்த மாதம் 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தார்.