மாணவிகளுக்கு தொந்தரவு: அரசு பள்ளி ஆசிரியர், ஆய்வக உதவியாளர் பணி இடைநீக்கம்
மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர், ஆய்வக உதவியாளர் ஆகிய 2 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
நடுநிலைப்பள்ளி ஆசிரியர்
சேலம் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 48). இவர் சேலம் அருகே சேலத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றினார். இவர் மதுபோதையில் பள்ளிக்கு வந்து மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்து உள்ளார்.
இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி அவர் மதுபோதையில் பள்ளிக்கு வந்து மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்து உள்ளார். இதை பார்த்த பெற்றோர் அவரை சரமாரியாக தாக்கினார்.
பணி இடைநீக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சூரமங்கலம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்பாபுவை கைது செய்தனர். இந்த நிலையில் அவரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டு உள்ளார்.
ஆய்வக உதவியாளர்
சேலம் இரும்பாலை அருகே உள்ள கீரபாப்பம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக கருப்பூரை சேர்ந்த வீரவேல் (38) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரவேலை கைது செய்தனர். இந்த நிலையில் வீரவேலை பணி இடைநீக்கம்(சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் உத்தரவிட்டு உள்ளார்.