கோத்தகிரி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை- போலீஸ் விசாரணை

கோத்தகிரி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-23 12:15 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

கூலித்தொழிலாளி

கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி அண்ணா நகரைச் சேர்ந்த தங்கவேல். இவரது மகன் சந்திர மோகன் (வயது 42). கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி புஷ்பராணி (36) என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சந்திரமோகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மரம் வெட்டும் பணியில் இருந்த போது, எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்ததில், அவருக்கு இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் அவர் 4 ஆண்டுகளாக படுத்த படுக்கையில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது மனைவி வழக்கம் போல கூலி வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்றுள்ளனர்.

உருக்கமான கடிதம் சிக்கியது

அன்று மாலை பணிக்கு சென்று திரும்பிய அவரது மனைவி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவரது கணவர் தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கோத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்திரமோகன் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், கடந்த 4 வருடங்களாக படுத்த படுக்கையில் இருந்து வந்த நிலையில் காலில் புண் ஏற்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்துக் கொள்வதாகவும், மகள்களை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என உருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்