சேகரிக்கப்பட்ட தடயங்கள், கைரேகை பதிவுகள் போலீசாரிடம் ஒப்படைப்பு
கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் கைரேகை பதிவுகள் சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது
சின்னசேலம்
தடய அறிவியல் நிபுணர்கள்
சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த கலவரத்தையடுத்து விழுப்புரம் மண்டல தடய அறிவியல் துறை துணை இயக்குனர் சண்முகம் தலைமையில் 8 பேரை கொண்ட குழுவினர் பள்ளி வளாகத்தில் தடயங்களை சேகரித்தனர். அதாவது கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், பெட்ரோல்-டீசல் போன்ற எரிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதா? வெளி நபர்கள் தடயங்களை விட்டுள்ளனரா? சி.சி.டி.வி. மற்றும் வீடியோ ஆதாரங்கள், கடிதங்கள் ஏதேனும் உள்ளனவா? ஆகிய தடயங்களை தடய அறிவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.
போலீசாரிடம் ஒப்படைப்பு
அதேபோல் கைரேகை நிபுணர்களும் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் உள்ள கதவு, ஜன்னல், சுவர்கள் ஆகியவற்றில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கலவரத்தின் போது வெடி மருந்துகள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டதா? என்று வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தடய அறிவியல் நிபுணர்கள் கடந்த ஒருவாரமாக நடத்தி வந்த தடயங்களை சேகரிக்கும் பணி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று தாங்கள் சேகரித்த தடயங்கள் குறித்த விவரங்களை சிறப்பு புலனாய்வு குழு மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதேபோல் கைரேகை நிபுணர்களும் தாங்கள் சேகரித்த கைரேகை பதிவு விவரங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.