பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற எச்.ராஜா கைது

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற எச்.ராஜா கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-14 20:34 GMT

பெரம்பலூர்,

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று மத்திய பா.ஜ.க. அரசின் பட்ஜெட் மற்றும் சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெறுவதாகவும், இதில் சிறப்பு அழைப்பாளராக அந்த கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த கூட்டத்தில் பங்கேற்க எச்.ராஜாவுக்கு, போலீசார் சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தடையை மீறி அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள எச்.ராஜா நேற்று காரைக்குடியில் இருந்து திண்டிவனம் நோக்கி காரில் சென்றார். பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று மாலை 5 மணியளவில் அவரது கார் வந்தது.

கைது-மறியல்

அப்போது அங்கிருந்த மங்களமேடு மற்றும் கடலூர் மாவட்ட போலீசார், அந்த காரை மறித்து நிறுத்தினர். மேலும் அவர் தடையை மீறி செல்வதாக கூறி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கடலூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர்-கடலூர் மாவட்ட பா.ஜ.க.வினர் அங்கு வந்து, திடீரென்று எச்.ராஜாவின் கார் முன்பு அமர்ந்து, அவரை கைது செய்ய விடமாட்டோம் என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும், தி.மு.க. அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து எச்.ராஜாவை போலீசார் கடலூர் மாவட்டம், ராமநத்தம் போலீஸ் நிலைய எல்லையில் உள்ள சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்று, அங்கு தங்க வைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்மையாக கண்டிக்கிறேன்

இதற்கிடையே சுங்கச்சாவடியில் காரில் இருந்தபடி எச்.ராஜா நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க என்னை சிறப்பு அழைப்பாளராக அழைத்ததன்பேரில் நான் அங்கு செல்வதற்காக வந்தேன். அதற்கு போலீசார் தடை விதித்து, என்னை அங்கு செல்ல விடாமல் தடுக்கின்றனர். தி.மு.க. அரசையும், அவர்களுக்கு ஆதரவாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்