சேலம் மத்திய சிறையில் துப்பாக்கி வெடித்த சம்பவம்: மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
சேலம் மத்திய சிறையில் துப்பாக்கி வெடித்த சம்பவம் தொடர்பாக மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
துப்பாக்கி வெடித்தது
சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் சுமார் 850-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை வழக்கு விசாரணைக்காக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கோர்ட்டுகளுக்கு ஆயுதப்படை போலீசார் அழைத்து செல்வதுவழக்கம்.
இதேபோல், கடந்த வாரம் சேலம் மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் மணிகண்டன் உள்பட 4 பேர் சேலம் மத்திய சிறைக்கு கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்து செல்ல சென்றனர். அங்கு மணிகண்டன் தன்னுடன் எடுத்து சென்ற துப்பாக்கியை அங்குள்ள மரத்தடியில் வானத்தை நோக்கி வைத்திருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் அவரது துப்பாக்கி திடீரென வானத்தை நோக்கி 'டமால்' என்று வெடித்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
போலீஸ்காரரின் துப்பாக்கி தானாக வெடித்த சம்பவம் தொடர்பாக சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் விசாரணை நடத்தினார்.
பணி இடைநீக்கம்
மேலும், இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பேரில், போலீஸ் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆயுதப்படை போலீஸ்காரர் மணிகண்டனின் கவனக்குறைவால் துப்பாக்கி வெடித்தது தெரியவந்தது.
இந்தநிலையில், சிறையில் துப்பாக்கி வெடித்த சம்பவம் தொடர்பாக ஆயுதப்படை போலீஸ்காரர் மணிகண்டனை நேற்று பணி இடைநீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இது ஆயுதப்படை போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.