கர்நாடகாவில் விவசாயம் மேற்கொள்ளும் கூடலூர் விவசாயிகள்

வனவிலங்குகள் தொல்லை, காலநிலை மாற்றத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கூடலூரில் இருந்து கர்நாடகாவுக்கு தினமும் சென்று விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, காலை, மாலை நேரங்களில் பஸ்கள் இயக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-10-18 18:45 GMT

கூடலூர், 

வனவிலங்குகள் தொல்லை, காலநிலை மாற்றத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கூடலூரில் இருந்து கர்நாடகாவுக்கு தினமும் சென்று விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, காலை, மாலை நேரங்களில் பஸ்கள் இயக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

விளைச்சல் பாதிப்பு

கேரளா-கர்நாடகா உள்பட வெளிமாநில மக்களின் நுழைவுவாயிலாக கூடலூர் திகழ்கிறது. இங்கு தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக காபி, குறுமிளகு, இஞ்சி, ஏலக்காய் உள்ளிட்ட பணப்பயிர்களும், வாழை, நெல், மேரக்காய், பாகற்காய், புடலங்காய், அவரை, தட்டைப்பயறு என காய்கறி விவசாயமும் நடைபெற்று வருகிறது.

ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் கூடலூர் புத்தூர்வயல், தொரப்பள்ளி, பாடந்தொரை மற்றும் ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகளில் பாரம்பரிய நெல் நடவு செய்யப்படுகிறது. இந்தநிலையில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து கனமழையால் விளைச்சலும் பாதிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

கர்நாடகாவுக்கு செல்லும் விவசாயிகள்

இதைத்தொடர்ந்து கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், அருகே உள்ள கர்நாடகா மாநிலம் குண்டல்பெட் பகுதிக்கு சென்று குத்தகைக்கு நிலம் எடுத்து வாழை மற்றும் பயிர்களை நடவு செய்து விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தினமும் காலையில் கூடலூரில் இருந்து புறப்பட்டு கர்நாடகா செல்கின்றனர். பின்னர் விவசாய பணிகளை முடித்துக் கொண்டு மாலையில் புறப்பட்டு கூடலூருக்கு வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூடலூரில் இருந்து குண்டல்பெட்டுக்கு தமிழக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், முழு ஊரடங்கை காரணம் காட்டி பஸ் இயக்குவது நிறுத்தப்பட்டது. வழக்கமாக பெங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு விரைவு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், முக்கிய இடங்களில் மட்டுமே நிறுத்தப்படுவதால் அந்த பஸ்களில் விவசாயிகள் பயணம் செய்ய முடிவதில்லை. இதனால் கூடலூரில் இருந்து குண்டல்பெட்டுக்கு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பஸ்கள் இயக்க வேண்டும்

கூடலூர் விவசாயி ரகுநாதன்:-

கூடலூர் புத்தூர்வயல், மண்வயல், பாடந்தொரை, முதுமலை பகுதி விவசாயிகள் ஏராளமானவர்கள் வனவிலங்குகள் தொல்லையால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் குத்தகை நிலத்தில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். பாகற்காய், வாழை, பூண்டு, பீன்ஸ், பீட்ரூட் ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளனர். கூடலூர் பகுதியில் வனவிலங்குகள் தொல்லை, கனமழை மற்றும் காலநிலை மாற்றத்தால் பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.

ஆனால், கர்நாடகாவில் எந்த பிரச்சினையும் இல்லை. இதனால் தினமும் காலையில் புறப்பட்டு விவசாய பணி மேற்கொண்ட பின்னர் மாலையில் ஏராளமானவர்கள் வீடு திரும்புகின்றனர். தற்போது இயக்கப்படும் விரைவு பஸ்கள் கிராமப்புறங்களில் நிறுத்துவதில்லை. இதனால் காலை, மாலை நேரத்தில் கூடலூரில் இருந்து குண்டல்பெட்டுக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரச்சினை இல்லை

தைதமட்டம் விவசாயி ராமச்சந்திரன்:-

கூடலூரில் விளைவிக்கப்படும் நெல் பயிருக்கு எந்த மானியமும் கிடைப்பதில்லை. விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்வதற்கு எந்திரம் கிடையாது. அறுவடை கூலிக்கு கூட வருவாய் கிடைப்பதில்லை. இதனிடையே காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது.

ஆண்டு முழுவதும் பாடுபட்டு நஷ்டம் தான் ஏற்படுகிறது. இதனால் சக விவசாயிகள் குண்டல்பெட் பகுதியில் விவசாயம் செய்வதை அறிந்து, நானும் கர்நாடகா சென்று விவசாயம் செய்து வருகிறேன். அங்கு இதுபோல் பிரச்சினை ஏற்படுவதில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்