கேரட் செடிகளில் வளர்ச்சி பாதிப்பு

ஊட்டியில் தொடர் பனிப்பொழிவால் கேரட் செடிகளில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விளைச்சல் குறையுமோ? என்று விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2023-02-08 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் தொடர் பனிப்பொழிவால் கேரட் செடிகளில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விளைச்சல் குறையுமோ? என்று விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

பனிப்பொழிவு

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடக்கம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர் பனிப்பொழிவு அதிகரித்து, அதன்பிறகு உறைபனி தாக்கம் காணப்படும். ஆனால் காலநிலை மாறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியது. இதனால் பனிக்காலம் தாமதமாக கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. டிசம்பர் மாதம் 24-ந் தேதி முதல் உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடும் உறைபனி தொடர்கிறது. இதனால் அவலாஞ்சி பகுதியில் குறைந்தபட்சமாக மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. மேலும் ஊட்டியில் குறைந்தபட்சமாக ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

வளர்ச்சி பாதிப்பு

சில நேரங்களில் உறை பனி தாக்கம் குறைந்தாலும், தொடர்ந்து பனிப்பொழிவு நீடிக்கிறது. இந்த தொடர் பனிப்பொழிவு காரணமாக தேயிலை செடிகள் கருகி வருவதோடு, காய்கறி தோட்டங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கேரட் செடிகளில் வளர்ச்சி வெகுவாக குறைந்து இருக்கிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படுமோ என்று விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கேரட் 4 மாத கால பயிர் ஆகும். தொடர்ச்சியாக எல்லா காலமும் பயிரிடப்பட்டு வருகிறது. நாங்கள் 2 மாதத்திற்கு முன்பு கேரட் சாகுபடி செய்தோம். தொடர் பனிப்பொழிவு காரணமாக வழக்கமாக 2 அடி உயரம் வரை வளர வேண்டிய பயிர் அரை அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ளது.

ஆனாலும் கேரட் பயிர் பிடிப்பில் பாதிப்பு வராது என்ற நம்பிக்கையில் களை எடுத்தல் உள்ளிட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் வரை கேரட் செடிகளில் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்