கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு

தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

Update: 2023-04-13 18:02 GMT

குறைதீர்வு கூட்டம்

பேரணாம்பட்டு தாலுகா விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நெடுமாறன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம், வனவர் தயாளன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் அருள் செல்வதாஸ், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் உதயகுமார் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:-

பேரணாம்பட்டு நகராட்சிப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவு நீர் பேரணாம்பட்டு நகரின் வழியாக செல்லும் ரங்கம் பேட்டை கானாற்றிலும், பேரணாம்பட்டு ஏரியிலும் விடுவதால் இதனை தோல் தொழிற்சாலைகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தங்கள் தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமலேயே இதனோடு கலந்து வெளியேற்றி வருவதால் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் மாசடைந்துவருகிறது.

மணல் கொள்ளை

இதனை தடுக்க நகராட்சி பகுதியில் வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து விட வேண்டும். மதினாப் பல்லி, பத்தலப் பல்லி, மலட்டாறுகள், ரங்கம் பேட்டை கானாறு ஆகியவற்றில் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளை குறித்து பொதுப்பணித் துறை, நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

மணல் கொள்ளை தொடர்ந்து நடை பெறுவதால் ஆறுகள் பள்ளமாகி நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்று படுகையிலுள்ள விவசாய நிலங்கள் அடித்து செல்லப்பட்டு வருகின்றன. எனவே மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.

பேரணாம்பட்டில் தோல் தொழிற்சாலைகளால் மாசு அதிகமாகி சுற்று சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்காணித்து கட்டுப்படுத்த வில்லை. குறை தீர்வு கூட்டங்களுக்கு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் யாரும் வருவதே இல்லை. அடுத்த கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும்

யானைகள் தொல்லை

பேரணாம்பட்டு சுற்றுப்புற பகுதியில் யானைகள், குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. யானைகள் அட்டகாசத்தை வனத்துறையினர் தடுக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. நேற்று முன்தினம் யானை தாக்கி பெண் படுகாயமடைந்துள்ளார். பேரணாம்பட்டு வனசரகர் கூட்டத்திற்கு வருவதே இல்லை.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

தாசில்தார் நெடுமாறன் வனத்துறையினரிடம், கேட்டதற்கு பட்டாசு வெடி வெடித்து யானைகளை விரட்டி வருவதாகவும், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருப்பதாகவும் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்