புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடியதை தாய் மற்றும் மனைவி கண்டித்ததால் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வாணியர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகவேலு மகன் தங்கமாரி (வயது 35). சமையல் எண்ணெய் வியாபாரம் செய்து வந்த இவர், சிறு வயது முதலே நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருந்து வந்தார். இவர் ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை தனது நண்பர்களுடன் சேர்ந்து 'கேக்' வெட்டி கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதேபோல் கடந்த வாரமும் ரஜினியின் பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
இதனை தங்கமாரியின் தாயார் மற்றும் மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கமாரி கடந்த 14-ந்தேதி இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கமாரிக்கு திருமணம் ஆகி 6 மாதங்களே ஆகிறது. புதுமாப்பிள்ளையான அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.