ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறியுள்ளார்.

Update: 2023-05-14 18:32 GMT

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆவணங்கள்

மதுரை மாவட்டத்தை சார்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், சென்னை ஓய்வூதிய இயக்குனரால் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் உள்ள குறைகளை் குறிப்பிட்டு, கலெக்டருக்கு தங்களது விவர குறிப்புகளுடன் அடுத்த மாதம் 9-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். தங்களது விண்ணப்பத்தின் மனுவின் மீது ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மனு என்று குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பம் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் கண்டிப்பாக இரு நகல்கள் இணைக்க வேண்டும். ஓய்வூதியர் பெயர் (குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தால் உறவுமுறை) குறிப்பிடப்பட வேண்டும். ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வந்தால் அது சம்பந்தமான விபரம் ஓய்வூதிய புத்தக எண் மற்றும் கருவூலத்தின் பெயர் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். ஓய்வூதிய பிரேரணை சென்னை மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டிருந்தால் அதன் விவரம் குறிப்பிடப்பட வேண்டும். ஓய்வூதிய பலன்கள் பெறுவது தொடர்பான கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து விண்ணப்பிக்கவும், கோரிக்கையின் விவரம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஓய்வூதியதாரர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய அலுவலர் மற்றும் அலுவலகத்தின் முழு முகவரி, தொலைபேசி எண்ணுடன் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

பிரச்சினைகள்

மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். பிற மாவட்டங்களை சார்ந்த அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு துறைகளிலிருந்து ஓய்வூதிய உத்தரவு ஆவணம் அனுப்புவதில் ஏற்படும் தாமதம் மற்றும் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து குறைகளை களைய விரைந்து நடவடிக்கை எடுக்கும் நோக்கில் மாவட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு பதில் அளிக்க உள்ளார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்