காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் புற்றுநோய் பாதிப்பு

காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பொதுமக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-12-30 19:08 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

பாலசுப்ரமணியன் (விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்): கரும்புக்கு அமைக்கப்பட்ட சொட்டுநீர் பாசனத்துக்கு 10 மாதமாக மானியம் வழங்கவில்லை. நாட்டில் வராக்கடன் ரூ.10.50 லட்சம் கோடி என தகவல் தெரிவிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.

அதனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்கடனை தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதேபோல் பரிந்துரை செய்யும் கடித நகலை, சம்பந்தப்பட்ட மனுதாருக்கும் வழங்க வேண்டும். காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர் : அனைத்து துறை அலுவலர்களும் அரசுக்கு பரிந்துரை செய்யும் கடிதத்தின் நகலை, சம்பந்தப்பட்ட மனுதாரருக்கும் வழங்க வேண்டும்.

கடிதம் அனுப்பவில்லை

திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன்: நான் 2 மாதமாக கேட்டதை அடுத்து, மனுவுக்கு பதில் அளித்து உள்ளனர். ஆனால் கலெக்டர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பதில் மட்டும் வந்தால் தீர்வு அல்ல. குறைதீர் கூட்டம், குறைகளை தீர்க்கும் கூட்டமாக இருக்க வேண்டும்.

கூட்டத்துக்கு அழைப்பு கடிதம் எனக்கு அனுப்பவில்லை. ஆனால் நான் நாளிதழில் படித்தும், சில விவசாயிகள் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இனிவரும் காலங்களில் முறையாக கடிதம் அனுப்ப வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர்: இனி தவறாமல் அழைப்பு கடிதம் அனுப்புகிறோம். அனைத்து விவசாயிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.

கரும்புவிலை

ராஜேந்திரன் (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர்): கரும்புக்கான கொள்முதல் விலையை அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை போல், டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2,950 வழங்குகிறது. அதில் ரூ.1,200 வெட்டுக்கூலி. ஆனால் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. முழுதொகையும் வழங்க வேண்டும்.

மல்லிகா (சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர்): அனைத்து விவசாயிகளுக்கும், கொள்முதல் விலை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நீடித்தது.

இதில் அரசு அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்