சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சனிக்கிழமை தோறும் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்துவதற்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் முன்னிலையில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் முதல் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நிதி முறைகேடு சம்பந்தமாக 48 மனுக்களும், நில அபகரிப்பு தொடர்பாக 11 மனுக்கள் உட்பட 59 மனுக்கள் பெறப்பட்டன. இதுதொடர்பாக புகார் தாரர்களையும் எதிர் தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் சமரசம் ஏற்படுகின்ற வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட குற்ற பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தெரிவித்தார்.