தர்மபுரியில் காவல்துறை சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்87 மனுக்கள் மீது உடனடி தீர்வு
தர்மபுரி
தர்மபுரியில் காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பெறப்பட்ட 87 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுக்கப்பட்ட மொத்தம் 118 புகார் மனுக்களும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
உடனடி தீர்வு
போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர். முகாமில் பெறப்பட்ட 87 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 31 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இந்த முகாமில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், அன்பழகன், செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரூக், வாசன், இயல்மூர்த்தி உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.