பொது இடங்களில் மரங்களை வெட்டுவதை ஒழுங்குபடுத்த பசுமைக்குழு

பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதை ஒழுங்குபடுத்த பசுமைக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்

Update: 2023-09-23 18:45 GMT

கோவை

பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதை ஒழுங்குபடுத்த பசுமைக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

பசுமைக்குழு கூட்டம்

பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தின் மாவட்ட பசுமைக்குழு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 23.8 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. அரசு மற்றும் பொது இடங்களில் மரங்கள் வெட்டுவதை ஒழுங்குபடுத்தவும், பொது நிலங்கள் மற்றும் பொது அலுவலகங்களில் மரக்கன்றுகள் நடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மாவட்ட அளவில் பசுமைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

2023-24-ம் ஆண்டுக்கு கோவை மாவட்டத்தில் வனத்துறை சார்பில் 10 லட்சத்து 42 ஆயிரத்து 538 மரக்கன்றுகளும், கோவை மாநகராட்சி சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகளும், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 75 ஆயிரத்து 462 மரங்கள், தன்னார்வ அமைப்பு சார்பில் 30 ஆயிரம், தனியார் நாற்றாங்கால்கள் மூலம் 60 ஆயிரம் என மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 58 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

மரக்கன்றுகள்

காலியிடங்களில் மரக்கன்று இந்த திட்டத்தின் கீழ் தேக்கு, மகாகனி, மலைவேம்பு, சவுக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, வேம்பு, ஈட்டி, புங்கன், சரக்கொன்றை, புளி, கொடுக்காபுளி, கொய்யா, நெல்லி, பாதாம் மற்றும் நாவல் போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. நமது மாவட்டத்தில் தற்போது வரை வனத்துறை சார்பில் 5 லட்சத்து 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.இதுதவிர போலீஸ் நிலையங்கள், அரசுக்கு சொந்தமான, பிற துறைகளுக்கு சொந்தமான காலி இடங்களை கண்டறிந்து அங்கு மரக்கன்றுகள் நட வேண்டும்.

இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, கோவை மாவட்டத்தின் வனப்பரப்பை அதிகரிக்க செய்து, பசுமையை ஏற்படுத்தும் நோக்குடன், மாவட்டத்திற்கான இலக்கை விரைவாக எட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் துவாரகநாத்சிங், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பஷீர் அகமது, கோவை தெற்கு ஆர்.டி.ஓ. பட்டரிநாதன், தன்னார்வலர்கள், வனச்சரக அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்