ராணிப்பேட்டையில் பசுமை குழு கூட்டம்

ராணிப்பேட்டையில் பசுமை குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-09-22 18:18 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட பசுமை குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாவட்டத்தில் அரசு திட்ட பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டிடப் பகுதிகளை விரிவுபடுத்துதல், நிலமாற்றம் செய்யும் போது அந்த இடத்தில் உள்ள பச்சை மரங்களை உரிய அனுமதி பெற்று அகற்றுவது குறித்தும், மரங்கள் அகற்றுவதற்கு மாற்றாக இரண்டு மடங்கு மரக்கன்றுகளை மாற்று இடத்தில் நடுவதற்காக வழங்கப்படும் ஒப்புதல் ஆணைகள் மற்றும் குழு அமைத்தல் வழங்கப்படும் திட்டப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

திண்டிவனம் அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் உள்ள மரங்களை அகற்றிட குழு ஒப்புதல் அளிப்பது குறித்தும், சோளிங்கர் நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டும் இடம், திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ள தற்போதைய இடத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் இடம், சோளிங்கர் நகராட்சி புதிய எரிவாயு தகனமேடை அமைக்கும் இடம், சென்னை- பெங்களூரு விரைவு பாதைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் உள்ள மரங்களை அகற்றிட குழு ஒப்புதல் வேண்டி வரப்பெற்ற கடிதங்கள் மீதும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு பசுமை திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 லட்சத்துக்கும் மேல் செடிகள் உற்பத்தி செய்து மரக்கன்றுகள் நடப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட துறைகளின் பங்களிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்