திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பறக்கவிட்ட மாணவர்கள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தாததை கண்டித்து மாணவர்கள் பட்டம் விடும் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-30 19:34 GMT

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தாததை கண்டித்து மாணவர்கள் பட்டம் விடும் போராட்டம் நடத்தினர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி, தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 123 தனியார், அரசு கலை அறிவியல், நுண்கலை கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் படித்து முடித்த மாணவ-மாணவிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தி பட்டம் வழங்கப்படவில்லை. இதைக்கண்டித்து பல்கலைக்கழகம் முன்பு பட்டம் விடும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

பட்டம் விடும் போராட்டம்

அதன்படி நேற்று காலை இந்திய மாணவர் சங்க திருச்சி மாவட்ட துணை செயலாளர் மோகன் தலைமையில் சுமார் 90 மாணவ-மாணவிகள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் மற்றும் மாணவர் சங்க கொடியை கையில் பிடித்தவாறு பட்டமளிப்புவிழா அங்கி அணிந்து கொண்டு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இருந்து ஊர்வலமாக பல்கலைக்கழக நுழைவு வாயிலுக்கு வந்தனர்.பின்னர் அங்கு திரண்டு நின்ற மாணவர்கள் பட்டமளிப்பு விழா நடத்தாத பல்கலைக்கழகத்தை கண்டித்தும் பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி வழங்காத தமிழக கவர்னரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் மாணவர்கள் சிலர் வானில் பறக்க விடும் பட்டங்களை மேலே தூக்கி வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதுகுறித்து மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் மோகன் பேசுகையில், வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விழா நடத்தி மாணவர்களுக்கு பட்டம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என்றார். சுமார் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்திவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தையொட்டி நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்