அரசு டவுன்பஸ் சிறைபிடிப்பு

மாணவிகளை அரசு பஸ் டிரைவர் இழிவாக பேசியதாக கூறி அவரை கண்டித்து அரசு டவுன் பஸ்சை நங்கவள்ளி அருகே கிராம மக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-09-28 20:35 GMT

மேச்சேரி:-

மாணவிகளை அரசு பஸ் டிரைவர் இழிவாக பேசியதாக கூறி அவரை கண்டித்து அரசு டவுன் பஸ்சை நங்கவள்ளி அருகே கிராம மக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவிகள் புகார்

நங்கவள்ளி அருகே பெரிய சோரகை தேங்காய் கொட்டாய், சீரங்கனூர் பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் தாரமங்கலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் தாரமங்கலத்தில் இருந்து மேட்டூர் வரை செல்லும் அரசு டவுன் பஸ்சில் சென்ற மாணவிகளை பஸ் டிரைவர் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் நடந்த விவரங்களை கூறி உள்ளனர். மேலும் மாணவிகள் தாரமங்கலத்தில் உள்ள போலீஸ் நிலையத்திலும் இது குறித்து புகார் கூறி உள்ளனர்.

சிறைபிடிப்பு

இந்த நிலையில் நேற்று காலையில் மேட்டூரில் இருந்து தாரமங்கலம் நோக்கி சென்ற அந்த அரசு டவுன் பஸ் தேங்காய் கொட்டாய் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்தது. அப்போது அங்கு வந்த அந்த கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

அப்போது மாணவிகளை இழிவாக பேசியதாக கூறப்படும் டவுன்பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். தகவல் அறிந்து தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பந்தப்பட்ட டிரைவர் இன்று(நேற்று) பணிக்கு வரவில்லை என்றும், சம்பவம் தொடர்பாக அரசு போக்குவரத்து கழகத்தின் தாரமங்கலம் கிளை மேலாளரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பிறகு சிறைபிடிக்கப்பட்ட பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் தாரமங்கலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்