பிரிபடா நிலம் மற்றும் கட்டிடத்திற்கான உயர்த்தப்பட்ட பதிவு கட்டணத்தை அரசு திரும்ப பெறவேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பிரிபடா நிலம் மற்றும் கட்டிடத்திற்கான உயர்த்தப்பட்ட பதிவு கட்டணத்தை அரசு திரும்ப பெறவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-08-06 11:36 GMT

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாலை தொடுப்பதற்காக தோட்டத்திலிருந்து பூவை பறிப்பவர் செடிக்கு ஆபத்து வராமல் எப்படி பூவை மட்டும் பறிக்கிறாரோ, அதுபோல மக்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட வேண்டுமென்று சான்றோர்கள் கூறுவர். இதற்குக் காரணம் மக்கள் சீராக வாழ்ந்தால்தான் அரசுக்கான வரி வருவாய் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதுதான். மாறாக, மக்களைப் பற்றி கவலைப்படாமல், வரி வசூல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஓர் அரசு செயல்பட்டால், வரி பெற வாய்ப்பே இல்லாத சூழ்நிலை உருவாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பொன் முட்டை இடும் வாத்தைக் காப்பது போல் மக்களை மென்மையுடன் கவனத்துடன் பாதுகாப்பது அவசியம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை நிலவுகிறது. அதாவது, பூவை மட்டும் பறிப்பதற்குப் பதிலாக செடியை வேருடன் பிடுங்கும் ஆட்சியாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு, மளிகைப் பொருட்கள் விலை உயர்வு, காய்கறி விலை உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு என பல உயர்வுகளினால் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், புதிதாக குடியிருப்புகள் வாங்குபவர்கள் தலையில் மற்றுமொரு மிகப் பெரிய பாரத்தை தி.மு.க. அரசு சுமத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களில் மட்டும், பதிவுத் துறையால் மூன்று விதமான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. முதலாவதாக, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கு முற்றிலும் முரணாக நிலங்களுக்கும், வீட்டுமனைகளுக்குமான வழிகாட்டி மதிப்பீட்டை பன்மடங்கு உயர்த்தி மக்கள்மீது கூடுதல் நிதிச் சுமையை தி.மு.க. அரசு சுமத்தியது.

இரண்டாவதாக, இருபது சேவைகளுக்கான பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைக் கட்டணத்தை உயர்த்தி தி.மு.க. அரசு ஆணை வெளியிட்டது. இதன்படி, குடும்பத்திற்குள் ஏற்படும் பாகப் பிரிவினை ஆவணம், நிலத்தீர்வை ஆவணம், விடுதலை ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம், பொது அதிகார ஆவணக் கட்டணம் ஆகியவை பன்மடங்கு உயர்த்தப்பட்டன.

தற்போது, மூன்றாவதாக புதிதாக வீடு வாங்குபவர்கள் பிரிபடா நிலம் (UDS) மற்றும் கட்டிடத்திற்கான பதிவுக் கட்டணத்தை தி.மு.க. அரசு அதிகரித்துள்ளது. புதிதாக வீடு வாங்குபவர்கள் இதுநாள் வரை பிரிபடா நிலத்திற்கு 9 விழுக்காடு பதிவுக் கட்டணமும், கட்டுமானத்திற்கு 4 விழுக்காடு பதிவுக் கட்டணமும் செலுத்தி வந்தனர். தற்போது, இதனை மாற்றி இரண்டிற்கும் 9 விழுக்காடு பதிவுக் கட்டணம் என்ற நடைமுறையை தி.மு.க. அரசு அறிவித்துள்ளது. அதாவது, அடுக்குமாடி குடியிருப்பின் மொத்த செலவில் 9 விழுக்காடு பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு வீடு வாங்குபவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, வீடு வாங்குபவர்கள் மேலும் கூடுதல் சுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். ஏற்கெனவே, வீட்டு கடனுக்கான வட்டிவீதம் வழிகாட்டி மதிப்பு, இதர பதிவுக் கட்டணங்கள் உயர்வு காரணமாக வீடு வாங்குபவர்கள் அல்லல்பட்டு கொண்டிருக்கையில், வீட்டின் மொத்த மதிப்பில் 9 விழுக்காடு பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக அமைந்துள்ளது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்பவர்களின் எண்ணத்தை சிதைக்கும் செயலாகும். தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. இந்த பதிவுக் கட்டண உயர்வு ரத்து செய்யப்பட வேண்டுமென்பதே ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 9 விழுக்காடு பதிவுக் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்