ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : ராமதாஸ்

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 வீதம் கொள்முதல் விலை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-11 16:53 GMT

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், '

காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள உழவர்கள் ஒரே நேரத்தில் இரு வகையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். தண்ணீர் இல்லாததால் கருகும் குறுவை பயிரைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் உழவர்கள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் அதிக செலவு செய்து விளைவித்த நெல்லை கட்டுபடியாகும் விலைக்கு விற்க முடியாமல் தவிக்கும் உழவர்கள் என துயரம் தொடர்கதையாகிறது

மேட்டூர் அணையில் 100 அடிக்கும் கூடுதலாக தண்ணீர் இருந்ததால், கடந்த இரு ஆண்டுகளைப் போலவே, நடப்பாண்டிலும் வழக்கமாக குறுவைப் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12-ஆம் நாள் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாத நிலையில், இருக்கும் தண்ணீரைக் கொண்டு வினாடிக்கு 10,000 கனஅடி என்ற அளவில் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது போதுமானது அல்ல என்பதாலும், கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை என்பதாலும் பல இடங்களில் குறுவை நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன.

எப்படியாவது பயிரைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சுவது, குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து ஊற்றுவது என அனைத்து வழிகளிலும் உழவர்கள் போராடுகின்றனர். ஆனாலும், குறுவைப் பயிர்களை அவர்களால் காப்பாற்ற முடியுமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இன்னொருபுறம் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்வளம் அதிகமுள்ள பகுதிகளில் நீர் இறைப்பான்களை பயன்படுத்தி முன்கூட்டியே சாகுபடி தொடங்கப்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அறுவடை தீவிரமடைந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். காவிரி பாசன மாவட்டங்களில் இப்போதும் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றாலும் கூட, அவற்றின் எண்ணிக்கை மிக, மிக குறைவாக இருப்பதால் அறுவடை செய்யப்பட்ட நெல் முழுவதையும் விற்பனை செய்ய முடியவில்லை.

அதனால், தனியார் வணிகர்களிடம் மிகக்குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கொள்முதல் நிலையங்களில் ஒரு குவிண்டால் நெல் ரூ.2160 வரை வாங்கப்படும் நிலையில், தனியார் வணிகர்கள் ரூ.1500-க்கும் குறைவாகவே கொள்முதல் செய்கின்றனர். ஒரு ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய ரூ.30,000 வரை செலவாகியுள்ள நிலையில், நெல் மூட்டைகளை தனியாரிடம் விற்பனை செய்தால் முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது.

காவிரி பாசன மாவட்டங்களில் 2023-24ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்குவதன் மூலம் தான் இந்தச் சிக்கலுக்கு தீர்க்க முடியும். கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டதைக் காரணம் காட்டி, வழக்கமாக அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கும் நெல் கொள்முதல், கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் நாள் தொடங்கப்பட்டது. இப்போதும் அதே தேதியிலோ அல்லது அதற்கு முன்பாகவோ நெல் கொள்முதல் தொடங்கப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பை ஓரளவாவது தடுக்க முடியும்.

நேரடி நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்குவதன் மூலம் அரசுக்கும் நன்மை கிடைக்கும்; உழவர்களுக்கு நன்மை கிடைக்கும். கொள்முதல் முன்கூட்டியே தொடங்கப்பட்டால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தது ரூ.143 கூடுதலாக கிடைக்கும்; அதிக எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்பதால், உழவர்கள் நெருக்கடியின்றி எளிதாக விற்பனை செய்ய முடியும். நாடு முழுவதும் நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதைப் போக்கவும் இது உதவும். எனவே, அதற்கான அனுமதியை மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு உடனடியாக பெற வேண்டும்.

நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்குவதற்கு வசதியாக, நெல்லுக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்த அளவு ஆதரவு விலையாக சன்ன ரகத்திற்கு ரூ.2203, சாதரண ரகத்திற்கு ரூ.2183 என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அத்துடன் சாதாரண நெல்லுக்கு ரூ.75, சன்னரக நெல்லுக்கு ரூ.100 ஊக்கத்தொகை மட்டும் வழக்கம் போல வழங்கப்பட்டால் அது உழவர்களுக்கு பயனளிக்காது. மாறாக, உழவர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 வீதம் கொள்முதல் விலை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்