கருப்பட்டியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்

கருப்பட்டியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-18 20:43 GMT

ராஜபாளையம். 

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர், புத்தூர், நல்லமங்கலம், கிருஷ்ணாபுரம், சொக்கநாதன் புத்தூர், கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.

600 தொழிலாளர்கள்

60 ஆயிரம் பனை மரங்களை நம்பி இப்பகுதியில் 600-க்கும் மேற்பட்ட பனை ஏறும் தொழிலாளர்கள் கருப்பட்டி உற்பத்தி செய்து வருகின்றனர். நுங்கு, பனங்கிழங்கு, தவுன் ஆகியவற்றிற்காக மற்ற மரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் எண்ணற்ற பேர் வாழ்ந்து வருகின்றனர். சில சமயங்களில் கருப்பட்டி உள்ளிட்ட பனை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. ஆதலால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என அவர்கள் வேதனையுடன் கூறினர்.

பொருளாதார நஷ்டம்

இதுகுறித்து தொழிலாளர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

நல்லமங்கலத்தை சேர்ந்த ஜேசுராஜா:-

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு கிலோ கருப்பட்டி ரூ.300 கொடுத்து வியாபாரிகள் வாங்கி சென்றனர். தற்போது ஒரு கிலோ கருப்பட்டியை ரூ.180-க்கும் குறைவாகவே வாங்கிச் செல்கின்றனர். இதனால் எங்களுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படுகிறது.

இதில் கிடைக்கும் குறைவான ஊதியத்தை கொண்டு குடும்ப செலவு, குழந்தைகளின் படிப்பு செலவு, மருத்துவ செலவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் பருவம் தவறி பெய்த மழை காரணமாக கடந்த ஆண்டை விட சுமார் 20 சதவீதம் கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் கருப்பட்டிக்கு உரிய விலை கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசே கருப்பட்டிகளை கொள்முதல் செய்து சந்தைப்படுத்தவும், ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மானிய விலையில் கருப்பட்டி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலை நிர்ணயம்

புத்தூரை சேர்ந்த பொன்னுச்சாமி:-

புத்தூர் கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் கருப்பட்டிகளை ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

முன்பு கருப்படிக்கு நல்ல விலை கிடைத்தது. ஆதலால் நாங்கள் மகிழ்ச்சியுடன் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தோம். தற்போது ஒரு கிலோ ரூ.180-க்கு தான் வாங்கி செல்கின்றனர்.

வருடத்திற்கு 3 மாதங்கள் மட்டுமே பனைத்தொழிலாளர்கள் பனையேறி கருப்பட்டி காய்ச்சுவார்கள். மற்ற நாட்களில் போதுமான வேலைகள் இல்லாததால் கிடைக்கின்ற வேலைக்கு சென்று விடுமோம். கருப்பட்டி விலையை அரசே நிர்ணயம் செய்து கூடுதல் விலை கிடைத்தால் பனை தொழிலாளர்கள் பயன்பெறுவர்.

நலிவடைந்து வரும் தொழில்

மயிலம்மாள்:-

பண்டிகை நாட்களில் கேரளா, சென்னை போன்ற வெளியூர்களுக்கு கருப்பட்டி அதிக அளவில் வாங்கி செல்வார்கள். ஆதலால் எங்கள் தொழில் மிகவும் சிறப்பாக நடந்து வந்தது.

ஆனால் தற்போது பனைத்தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. பனைத்தொழிலாளர்களை காப்பாற்ற அரசு கருப்பட்டியை கொள்முதல் செய்து கூடுதல் விலைக்கு வாங்கினால் பனை ஏறும் குடும்பத்தினர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்