பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு
ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தபட்ச நிலம் ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கடலூர் மாவட்டம் வண்ணாங்குடிகாடு கிராமத்தில் ஆரம்பப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கார்த்திகேயன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், புதிதாக அமைக்கப்படும் பஞ்சாயத்து அலுவலகத்தை இடிக்க உத்தரவிடுவது முறையாக இருக்காது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அதே சமயம், பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ளாட்சி மற்றும் அரசு அமைப்புகளுக்காக இனிமேல் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், வேறு கட்டிடங்கள் கட்டப்படுவதால் திறந்தவெளி நிலம், விளையாட்டு மைதானங்கள் ஒதுக்க முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அரசின் கொள்கைப்படி ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தபட்ச நிலம் ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.