அரசு பள்ளி தலைமை ஆசிரியை இடமாற்றம்
மாணவ- மாணவிகளை பிரம்பால் அடித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக வசந்தகுமாரி பணியாற்றினார். இந்த பள்ளியில் கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குறும்படம் திரையிடப்பட்டது. அப்போது மாணவ, மாணவிகள் சிலர் கூச்சலிட்டனர். அங்கு வந்த தலைமை ஆசிரியை வசந்தகுமாரி மாணவ, மாணவிகள் சிலரை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி முதன்மை கல்வி அலுவலருக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் தலைமை ஆசிரியை வசந்தகுமாரியை கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து முதன்மை கல்வி அதிகாரி முருகன் உத்தரவிட்டார்.
கொளத்தூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றியவர் கல்பனா. இவர் சரியாக பள்ளிக்கு வருகை புரிவதில்லை என்று புகார் எழுந்தது. இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி கல்பனாவை நடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றி நடவடிக்கை எடுத்தனர். மேலும் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிய தனலட்சுமி என்பவரும் செட்டிமாங்குறிச்சி அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்து முதன்மை கல்வி அதிகாரி முருகன் உத்தரவிட்டார்.