அரசு-தனியார் பஸ்கள் மோதல்

சத்திரப்பட்டி அருகே அரசு-தனியார் பஸ்கள் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-11-19 16:31 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து பழனி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இதேபோல் சென்னையில் இருந்து பழனியில் நடைபெறும் திருமணத்துக்காக, 50 பேரை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்றது. திண்டுக்கல்-பழனி சாலையில் 2 பஸ்களும் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன. சத்திரப்பட்டி பெரியபாலம் என்னுமிடத்தில் வந்தபோது முன்னால் சென்ற வேனை முந்துவதற்காக அரசு பஸ் டிரைவர் முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. அந்தநேரத்தில் பின்னால் வந்த ஆம்னி பஸ், அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பஸ்களும் சேதம் அடைந்தன. மேலும் அரசு பஸ்சில் பயணித்த ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 40), முத்துச்சாமி (52), அழகர்சாமி (57), பொன்ராஜ் (46) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ராதாதேவி (61) லட்சுமி (50) விஜயகுமார் (56) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்