பேரி கார்டு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அரசு ஊழியர் பலி
பள்ளிகொண்டா அருகே பேரி கார்டு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா பசுமத்தூர் யாதவர் தெரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவர், கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வந்தார். இவர், பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது குறுக்கே வைத்திருந்த பேரி கார்டு மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
விபத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த சதீஷ்குமாருக்கு கல்பனா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.