பாராசூட் மூலம் குதித்து ஊட்டி அரசு கல்லூரி மாணவி சாதனை
டெல்லியில் ேபார் விமானத்தில் 2 கி.மீ. உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து ஊட்டி அரசு கல்லூரி மாணவி சாதனை படைத்து உள்ளார்.
ஊட்டி,
டெல்லியில் ேபார் விமானத்தில் 2 கி.மீ. உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து ஊட்டி அரசு கல்லூரி மாணவி சாதனை படைத்து உள்ளார்.
கல்லூரி மாணவி
சேலம் மாவட்டம் ஓமலூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சண்முகம்-இளையராணி தம்பதியின் மகள் கோகிலவாணி. இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை சுற்றுலாவியல் பாடப்பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கோகிலவாணிக்கு தேசிய மாணவர் படையில் (என்.சி.சி) ஆர்வம் இருந்ததால், அதுதொடர்பான பயிற்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்தநிலையில் சமீபத்தில் டெல்லியில் தேசிய மாணவர் படை பாரா கேம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கலந்துகொண்டனர். இந்த முகாமில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவி கோகிலவாணி இடம் பெற்றார். அவர் விமானப்படையின் போர் விமானத்தில் பயணித்து, 2 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் வானில் குதித்து சாகச பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
சாகச முகாம்கள்
இதுகுறித்து 31-வது தமிழ்நாடு தனிப்பிரிவு என்.சி.சி. தலைமை அதிகாரி கர்னல் சீனிவாஸ் கூறியதாவது:-
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் 31-வது தமிழ்நாடு தனிப்பிரிவு என்.சி.சி. மூலம் செயல்படும் தேசிய மாணவர் படையில் 100 மாணவர்கள் இந்திய ராணுவ பயிற்சி பெற்று வருகின்றனர். தேசிய மாணவர் படையில் இந்திய அளவில் பல்வேறு சாகச முகாம்கள் நடைபெற்று வருகிறது. புதுடெல்லியில் உள்ள ஆக்ராவில் பாரா முகாம் கடந்த மாதம் நடைபெற்றது. இதற்கு தமிழகத்தில் இருந்து 2 மாணவர்கள் மற்றும் மாணவி கோகிலவாணி தேர்வாகினர். விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து மாணவி சாதனை படைத்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் மாணவி கோகிலவாணிக்கு, பெற்றோர், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவரது சாதனையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஊட்டி அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள், அதன் அலுவலர் விஜய் தலைமையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.