சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சாலை மறியல் 33 பேர் கைது
சேவையை உடனே வழங்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சேலம்,
சேவை பாதிப்பு
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொழில் நுட்ப கோளாறு காரணமாக அரசு கேபிள் டி.வி. சேவை முடங்கி உள்ளது. இதனால் அரசு கேபிள் டி.வி. மூலம் பயனடைந்து வரும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேவையை உடனடியாக வழங்க கோரி நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான ஆபரேட்டர்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் நேற்றும் சேவை வழங்கப்படவில்லை.
இதனால் காலையில் 30-க்கும் மேற்பட்ட அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் சேவையை உடனடியாக வழங்க கோரி திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
33 பேர் கைது
இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைய மறுத்துவிட்டனர். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் 33 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்று காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக இதுகுறித்து அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கூறும் போது, 'கடந்த 18-ந் தேதி முதல் அரசு கேபிள் டி.வி.யின் சேவை முடங்கியது. இதுகுறித்து பொதுமக்கள் கேட்கும் போது அவர்களுக்கு நாங்கள் சரியான பதில் கூற முடியாமல் தவித்து வருகிறோம். தொடர்ந்து சேவை வராததால் சிலர் தனியார் கேபிள் டி.வி.க்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களது இணைப்புகள் குறைவதுடன் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக சேவையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.