அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையை நிறுத்தியது சட்டப்படி தவறு என்றும், சேவையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு 60 லட்சம் எஸ்.டி. செட்டாப் பாக்ஸ், 10 லட்சம் எச்.டி. செட்டாப் பாக்ஸ் வழங்க கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த டெண்டரை கோவையில் தொழிற்சாலை வைத்துள்ள மும்பையைச் சேர்ந்த மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பாலாஜி மிஷின் ஒர்க்ஸ் நிறுவனமும் எடுத்தன. ஒப்பந்த பணி வழங்குவதற்கு முன்பே, இந்த 2 வகையான செட்டாப் பாக்ஸ்களையும் 3 ஆண்டுகள் வாரண்டிக்கு பின்னரும் சர்வீஸ் செய்து தரவேண்டும் என்று கூறி அதற்கான ஒப்புதல் கடிதங்களையும் பெற்றுள்ளோம்.
ஆனால், இந்த நிறுவனங்களுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்க 'ஆர்டர்' அனுப்பியும், ஒப்பந்தத்தின்படி 90 நாட்களுக்குள் வழங்கவில்லை.
காலதாமதம்
அந்த 90 நாட்கள் கடந்த பின்னர், சொற்ப எண்ணிக்கையில் செட்டாப் பாக்ஸ்களை வழங்கிவிட்டு, மீதுமுள்ளவற்றை வழங்குவது இல்லை. ஒவ்வொரு 'ஆர்டரின்' போதும் இந்த காலதாமதம் ஏற்பட்டது.
ஒப்பந்தத்தின்படி ஒரு வார கால தாமதத்துக்கு 0.5 சதவீதம் முதல் அதிகபட்சமாக 5 சதவீத அபராதம் விதிக்கப்படும். அதற்கும் பின்னரும் வழங்கவில்லை என்றால் ஆர்டர் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த நிறுவனங்கள் தொடர்ந்து காலதாமதம் செய்துவந்ததால், ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று அவர்களுக்கு விளக்கம் கேட்டு 2018-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நிதி இழப்பு
அதற்கு ஒப்பந்த நிறுவனங்கள் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்விதமாக இல்லை. அதன்பின்னரும் காலதாமதம் செய்தால், முன்னறிவிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்குப் பின் போதிய கால அவகாசம் வழங்கியும் அவர்கள் செட்டாப் பாக்ஸ்களை வழங்கவில்லை. இதனால் 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி முதல்-அமைச்சர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடப்பட்டது. அப்போது 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதிக்குள் செட்டாப் பாக்ஸ்களை வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னரும் காலதாமதம் செய்ததால், அரசு கேபிள் டி.வி நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. போட்டியாளர்களுடன் போட்டியிட முடியாமல் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டது.
தடை வேண்டும்
இதனால், இந்த நிறுவனங்களுக்கு வழங்கவேண்டிய தொகையில் சுமார் ரூ.52 கோடி நிறுத்திவைக்கப்பட்டது. அதையடுத்து கடந்த ஜூலை மாதம் அந்த நிறுவனங்கள் எங்களுக்கு அனுப்பியுள்ள நோட்டீசுகளில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தன. பழியை எங்கள் நிறுவனத்தின் மீது சுமத்த முயற்சித்தன.
இந்தநிலையில், கேபிள் டி.வி சேவையையும், செட்டாப் பாக்ஸ் சேவையையும் ஒட்டுமொத்தமாக இந்த நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. ஒளிபரப்பு சர்வருக்கான ரகசிய குறியீடு அனைத்தும் இந்த நிறுவனங்களிடம்தான் உள்ளது. ஒப்பந்தத்தின்படி இதுபோன்ற பிரச்சினைகள் வரும்போது, மத்தியஸ்தர் மூலமே தீர்வு காணவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரம் தொடர்பான சமரச தீர்வு காணும் வரையில், கேபிள் டி.வி சேவையை நிறுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். சேவையை நிறுத்த இந்த நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
தவறு
இந்த வழக்குகள் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, 'அரசு கேபிள் டி.வி.யின் செட்டாப் பாக்ஸ் மென்பொருளை பராமரித்துவரும் தனியார் நிறுவனங்கள் கேபிள் டி.வி சேவைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கில் மென்பொருளை தொழில்நுட்பரீதியாக முடக்கியுள்ளன' என்று வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, 'கட்டணம் தொடர்பான பிரச்சினைக்காக அரசு கேபிள் டி.வியின் கேபிள் சேவையை முடக்குவது என்பது ஏற்புடையதல்ல. அரசு கேபிள் சேவையை நிறுத்தியது சட்டப்படி தவறு. இந்தப் பிரச்சினைக்கு மத்தியஸ்தர் மூலமாக 90 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மேலும், அரசு கேபிள் டி.வியின் சேவையை இடையூறு இல்லாமல் பொதுமக்களுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.