மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; மாணவன் உள்பட 2 பேர் பலி

அணைக்கட்டு அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ்மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Update: 2022-09-29 16:56 GMT

அணைக்கட்டு அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ்மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மோட்டார்சைக்கிளில் சென்றனர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூர் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் ஊனை வாணியம்பாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளாா். இவரது மூத்த மகன் நந்தகுமார் (வயது 18). பாலிடெக்னிக்கில் படித்துவந்த இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். அதேப் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரது மகன் தேவா (16). அணைக்கட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நந்தகுமார் அவரது மோட்டார் சைக்கிளில் அணைக்கட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தேவாவை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கு வேலை முடிந்தவுடன் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஏரிப்புதூர் நோக்கி பகல் 12.30 மணிக்கு புறப்பட்டனர்.

பஸ்மோதி பலி

அங்குள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்று கொண்டிருந்தபோது ஏரிப்புதூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நந்தகுமார் மற்றும் தேவா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் ரமேஷ் என்பவரிடம் அணைக்கட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊனை வாணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கீதா வெங்கடேசன் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்