கவர்னர் ஆர்.என்.ரவி சிதம்பரம் வருகை: யோகா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்கிறார்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிதம்பரம் வருகை தந்தார். அவர் இன்று (புதன்கிழமை) அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடக்கும் யோகா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Update: 2023-06-20 18:45 GMT

உலக யோகா தினத்தையொட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விளையாட்டு மைதானத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கும் யோகாசன நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி 9.15 மணி வரை நடக்கிறது.

இந்த யோகாசன நிகழ்ச்சியை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்து பங்கேற்கிறார். இதில் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 30 கல்லூரிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பிறகு அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். தொடர்ந்து மாலை 3.30 மணி அளவில் கார் மூலம் புறப்பட்டு புவனகிரி அருகே வள்ளலார் பிறந்த இடமான மருதூருக்கு செல்கிறார். அங்கு வள்ளலார் பிறந்த இடத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு வள்ளலார் வாழ்ந்த அவரது வீடான கருங்குழிக்கு செல்கிறார். அங்கு வள்ளலார் வாழ்ந்த வீட்டை கவர்னர் ஆர்.என். ரவி பார்வையிடுகிறார்.

வள்ளலார் பிறந்த நாள் விழா

அதையடுத்து மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற இடத்திற்கு சென்று, அதையும் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வடலூரில் உள்ள சத்திய ஞான சபைக்கு சென்று பார்வையிடுகிறார். மாலை 5.30 மணி அளவில் வடலூர் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் மகாலில் நடக்கும் வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசுகிறார்.

அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலை 6.30 மணி அளவில் கார் மூலம் புறப்பட்டு புதுச்சேரி சென்றடைகிறார். அங்கு தனியார் ஓட்டலில் தங்கும் அவர் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

கவர்னர் வருகை

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து கார் மூலம் புதுச்சேரி வந்தடைந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலை 6.30 மணி அளவில் கடலூர் வழியாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு இரவு 7.15 மணி அளவில் வருகை தந்தார்.

அங்கு அவருக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியன், சிதம்பரம் உதவி கலெக்டர் சுவேதா சுமன், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன், பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் ஆகியோர் வரவேற்றனர். அப்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், யோகா மைய இயக்குனர் வெங்கடாஜலபதி, உடற்கல்வித்துறை இயக்குனர் செந்தில்வேலன், துணைவேந்தரின் நேர்முகச் செயலாளர் பாக்யராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து அவர் இரவு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்