முதல்-அமைச்சர் சொல்வதை கவர்னர் கேட்க வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
“முதல்-அமைச்சர் சொல்வதை கவர்னர் கேட்க வேண்டும்'' என்றும், “கவர்னர் அரசியல் செய்யக்கூடாது'' என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலே இலக்கு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம், ஆரணி, காஞ்சீபுரம் ஆகிய மூன்று மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.
முன்னதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எங்களுடைய நிர்வாகிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் ஆயத்த பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதையொட்டி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வியூகம் வகுத்து வருகிறோம். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை அணுக உள்ளோம். எங்களுடைய இலக்கு 2024 அல்ல 2026. அதற்கேற்ப வியூகங்களை அமைத்து வருகிறோம். தேர்தல் நெருக்கத்தில் எங்களுடைய நிலைப்பாட்டை விளக்குவோம்.
கவர்னர் அரசியல் செய்யக்கூடாது
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின் போது இல்லத்தரசிகள் அனைவருக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவோம் என கூறிவிட்டு, தற்போது தகுதியுடையோருக்கு மட்டும் வழங்கப்படும் என்பதை ஏற்கவே முடியாது. இதை முன்பே சொல்லியிருக்கலாமே... ஆட்சிக்கு வந்ததும் இப்படி கூறுவது ஏற்புடையதல்ல.
தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் போக்கு என்பது தமிழக அரசின் வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும். முதல்-அமைச்சரும், கவர்னரும் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டவர்கள். முதல்-அமைச்சர் என்ன சொல்கிறாரோ, அதற்கேற்ப கவர்னர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கவர்னர் இதில் அரசியல் செய்யக்கூடாது. அதேவேளை பா.ஜ.க.வின் கொள்கைகளை வெளிப்படுத்துவது போல பேசிவருகிறார். அவ்வாறு கவர்னர் பேசக்கூடாது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர், உரிய துறைகளுக்கு பரிந்துரைக்கலாமே தவிர, நடவடிக்கை எடுக்க அவருக்கு சட்டப்படி அதிகாரம் கிடையாது. எனவே கவர்னரும், முதல்-அமைச்சரும் சேர்ந்து செயல்பட்டால் தான் தமிழ்நாடு வளர்ச்சி அடையும். கவர்னர் என்பவர் மத்திய-மாநில அரசுக்கிடையே ஒரு பாலமாக செயல்பட வேண்டும்.
அனைத்து கட்சி கூட்டம்
அமைச்சர் முத்துசாமி ஒரு நல்ல மனிதர். அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைந்து மீண்டும் வந்தாலும், மதுவிலக்கு-ஆயத்தீர்வை துறை தொடர்ந்து உங்கள் வசமே இருக்கும் என்ற உத்தரவாதத்தை முத்துசாமிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுக்கவேண்டும். தக்காளி அதிகம் விளையக்கூடிய தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகம் விளையும் நேரங்களில் குளிர்பதன கிடங்குகளை உருவாக்கி தக்காளியை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் திராவிட மாடல் அரசு என பெருமை சொல்லிக் கொள்வதில் எந்த நன்மையும் மக்களுக்கு கிடையாது.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசும், கர்நாடக மாநில அரசும் அமர்ந்து பேசி உரிய தீர்வை காண வேண்டும். இந்த பிரச்சினை இப்படியே தொடர்வதற்கு இரண்டு மாநில அரசுகளும் அனுமதிக்க கூடாது. இதுதொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதேபோல நீர் மேலாண்மை, நீர் ஆதாரங்களை பாதுகாக்க, மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கிட வேண்டும். மதுவிலக்கு விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் விஜய் மீது தாக்கு
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சமீபத்தில் வெளியான 'லியோ' படத்தின் 'நான் ரெடி தான் வரவா...' என்ற பாடலில் நடிகர் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பது தொடர்பாக அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பதிலளிக்கையில், "பெரியார், அம்பேத்கர், காமராஜர் பற்றி பேசினால் மட்டும் போதாது. அவர்களுடைய கொள்கைகளை ஏற்று அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்", என்றார்.
சமீபத்தில் 10, 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கவுரவித்து பாராட்டிய விஜய், அந்த விழாவில் 'பெரியார், அம்பேத்கர், காமராஜர் பற்றி படிக்க வேண்டும்' என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். அதனை குறிப்பிட்டு நடிகர் விஜய்யை அன்புமணி ராமதாஸ் தாக்கி விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.