ராமேசுவரம் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்

ராமேசுவரம் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சாமி தரிசனம் செய்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார்.

Update: 2022-06-25 16:52 GMT

ராமேசுவரம்

ராமேசுவரம் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சாமி தரிசனம் செய்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார்.

ராமேசுவரத்தில் தரிசனம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவில் ராமேசுவரம் வந்தார். இரவில் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கினார்.

நேற்று அதிகாலை அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்தார். அங்கு கடலில் இறங்கி கடல் நீரை தலையில் தெளித்துக்கொண்டார். பின்னர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றார். கவர்னருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கோவிலில் ஸ்படிக லிங்க தரிசன பூஜையில் கலந்து கொண்ட அவர், சுவாமி-அம்பாள், நடராஜர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.

அப்போது ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கோவில் துணை ஆணையர் மாரியப்பன், வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், தாசில்தார் அப்துல் ஜபார் உடன் இருந்தனர்.

அப்துல்கலாம் நினைவிடம்

பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடிக்கு குடும்பத்துடன் சென்ற அவர், அரிச்சல்முனை கடற்கரை பகுதியை பார்வையிட்டார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டிற்கு சென்றார். அவருக்கு கலாம் குடும்பத்தினர், அப்துல்கலாம் எழுதிய திருப்புமுனை என்ற புத்தகத்தை கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் வீட்டின் மேல் தளத்தில் உள்ள கலாமின் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது கலாமின் அண்ணன் மகன் ஜெய்னுலாபுதீன், மகள் நசீமா மரைக்காயர், பேரன் சேக் சலீம் உடன் இருந்தனர்.

கலாம் நினைவிடத்தில் மரியாதை

இதையடுத்து அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்ற கவர்னர், அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கலாம் பற்றிய புகைப்படங்கள் மற்றும் அவரது சிலைகளை பார்வையிட்டார். பின்னர் கார் மூலமாக கவர்னரும், அவருடைய குடும்பத்தினரும் மதுரை விமான நிலையம் புறப்பட்டனர்.

கவர்னர் வருகையையொட்டி காலை 6 மணி முதல் 8 மணி வரை சுற்றுலா வாகனங்கள் தனுஷ்கோடி பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்